raman dorairajan Jan 19, 2022

நீங்கள் அனுமனை தரிசித்தபோதோ அல்லது அனுமனின் படத்தைப் பார்த்தபோதோ கவனித்திருக்கலாம் அனுமனின் வாலில் ஒரு மணி தொங்கிக் கொண்டிருக்கும். வாலில் அந்த மணி எப்படி வந்தது தெரியுமா? அது ஒரு கதை. படியுங்கள். தந்தை தசரதன் தன் பத்தினி கைகேயிக்கு கொடுத்த வாக்குப்படி ஸ்ரீராமன் சீதா பிராட்டியுடனும் தன் சகோதரன் லட்சமணனுடனும் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்கு சென்றதும் அந்த வனத்தில் சீதாப்பிராட்டியை ராவணன் கடத்திச் சென்ற கதையும் நமக்கெல்லாம் தெரிந்ததே. சீதாப்பிராட்டியை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன் ஸ்ரீ ராமன் வானரப்படையை திரட்டிக் கொண்டிருந்தார். வானரங்களில் பல வகை. உயரமானவை,குட்டையானவை என்று. அதில் " சிங்கலிகா" என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை.இதில் ஆயிரம் வானரங்கள். இவை எப்படி போர்புரியும் என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இவை கூட்டமாக சென்று எதிரியின் படைவீரர்கள் மேல் விழுந்து பற்களால் கடித்துக் குதறியும் நகங்களால் பிராண்டியும் போரிடும். போருக்குப் புறப்படும் வீரர்களை வழியனுப்பும்போது அவர்கள் குடும்பத்தார்களின் கண்களில் கண்ணீர்,அவர்கள் உயிருடன் பத்திரமாக திரும்பி வரவேண்டுமே என்ற கவலையில். அதைக் கவனித்த ஸ்ரீராமன் கூறினார் " யாரும் கவலைப்பட வேண்டாம்.என் படை வீரர்களை பத்திரமாக திருப்பிக் கொண்டு வந்து சேர்ப்பது என் பொறுப்பு" என்று. போர் ஆரம்பமாயிற்று.கடும்போர் நடந்து கொண்டிருந்தது. ராவணனின் படையில் பல முக்கியமான வீரர்களும் படைத் தலைவர்களும் மடிந்தார்கள்.வேறு வழியில்லாமல் தூங்கிக் கொண்டிருந்த தன் தம்பி கும்பகர்ணனை எழுப்பி போரிடச்சொன்னான் ராவணன். ராட்சசனைப் போல் இருந்தாலும் கும்பகர்ணன் மிகவும் நல்லவன். கும்பகர்ணன் "இந்த போர் வேண்டாம் நீங்கள் சீதாதேவியைக் கடத்தியதற்காக ஸ்ரீராமனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் " என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ராவணன் கேட்கவில்லை.வேறு வழியின்றி அண்ணனின் ஆணைப்படி போருக்குப் புறப்பட்டான் கும்பகர்ணன். கும்பகர்ணனின் ராட்சத உருவத்திற்கேற்றாற்போல் அவனது தேரும் மிகப்பெரியதாக இருந்தது. தேரின் முன்புறம் பெரிய பெரிய மணிகள் தொங்கிக்கொண்டிருந்தன. போர் தொடங்கி சிறிது நேரத்தில் ராமபாணத்திற்கு பலியானான் கும்பகர்ணன். தேரிலிருந்து சாயும்போது கும்பகர்ணனின் கை பட்டு ஒரு மணி கழன்று கீழே விழந்தது. கீழே விழுந்த மிகவும் பெரிய பாரமான மணி போரிட ஒன்றாக ஓடிக்கொண்டிருந்த ஆயிரம் வானரங்கள் மேல் விழுந்து அவர்களை மூடிவிட்டது. திடீரென்று தங்கள் மேல் எதையோ வைத்து மூடிவிட்டதைப்போன்று உணர்ந்த வானரங்கள் பயந்து விட்டன.ஒரே இருட்டு.நல்லவேளை மணி விழுந்த இடம் கரடு முரடாக இருந்ததால் சுவாசிக்க காற்று வந்தது.சில மணி நேரங்கள் ஆன பிறகும் அவர்களைக் காப்பாற்ற யாரும் வரவில்லை. ஒரு வானரம் சொன்னது " இந்த சுக்ரீவனை நம்பி வீணாகப்போய்விட்டோம். நாம் எல்லோரும் சாகப்போவது உறுதி" என்றது " சுக்ரீவனும் அனுமனும் ஒன்றும் செய்யப்போவதில்லை நம்மைக் காப்பாற்ற .நம் தலைவிதி இப்படியே கிடந்து சாகவேண்டியதுதான்" சொன்னது இன்னொரு வானரம் " ஸ்ரீராமன் சொன்னாரே போருக்கு புறப்பட்டவர்களையெல்லாம் பத்திரமாக உயிரோடு திரும்ப கொண்டுவந்து சேர்ப்பது அவர் பொறுப்பு என்றாரே,அவர் மட்டும் என்ன செய்தார்" இன்னொரு வானரம் சொன்னது. இதைக்கேட்ட மற்ற வானரங்களும் " ஆமாம் ஆமாம் " என்றன. இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவர்களில் ஒரு மூத்த வானரம் எல்லோரையும் அதட்டியது. " முதலில் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதை நிறுத்துங்கள்.நான் சொன்னதை மட்டும் செய்யுங்கள்.எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு ஸ்ரீ ராமனை மனதில் நினைத்துக் கொண்டு ' ராம் ராம் ராம்' என்று ஜெபம் செய்யுங்கள். ஸ்ரீ ராமன் நம் எல்லோரையும் நிச்சயம் காப்பாற்றுவார்" என்று சொன்னது.எல்லா வானரங்களும் அப்படியே செய்தன. கடைசியில் ராமபாணத்தால் ராவணனும் கொல்லப்பட்டான். போர் முடிந்தது. சீதாப்பிராட்டியை மீட்டதும் அயோத்திக்கு திரும்ப ஆயுத்தமானார்கள். அப்போது ஸ்ரீராமன் சொன்னார் " சுக்ரீவா நம் படையில் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்களா. எண்ணிக்கொண்டு வா" " பிரபு! எண்ணிவிட்டேன்.ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை" என்றான் சுக்ரீவன். " இல்லை.மற்றும் ஒரு முறை சரியாக எண்ணி வா " என்றார் ஸ்ரீராமன். ஸ்ரீராமனின் ஆணைப்படி மற்றொருமுறை எண்ணிவிட்டு வந்த சுக்ரீவன் சொன்னான். " தங்கள் ஆணைப்படி இன்னொரு முறை எண்ணினேன்.ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை" " அனுமா நீ யும் என்னுடன் வா.நாம் அந்த ஆயிரம் வானரங்களை தேடுவோம். "என்றார் ஸ்ரீராமன் அனுமனும் ஸ்ரீராமனும் வானர்களைத்தேடி போர்க்களத்தில் நடந்தார்கள். பல இடங்களில் மடிந்து கிடந்த படை வீரர்கள்,உடைந்து கிடந்த தேரின் பாகங்கள், அம்புகள், கேடயங்கள் என்று எல்லாவற்றையும் கிளறிப்பார்த்தான் அனுமன். சிங்கலிகர்கள் தென்படவில்லை. திடீரென்று ஸ்ரீராமன் ஒரு இடத்தில் நின்றார். " அனுமா! அங்கே பார்.ஒரு பெரிய மணி தெரிகிறது." ஸ்ரீராமன் என்ன சொல்லப்போகிறார் என்று புரிந்து விட்டது அனுமனுக்கு. இருவரும் விரைந்தார்கள் அந்த இடத்திற்கு . அனுமன் தன் வாலின் நுனியை அந்த மணியின் வளையத்தில் நுழைத்து தூக்கினான். சஞ்சீவி பர்வதத்தையே தன் ஒரு கையால் தூக்கிக் கொண்டு பறந்த அனுமனுக்கு இது ஒரு பொருட்டா என்ன! அனுமன் மணியைத் தூக்கியதும் அதன் கீழ் ஆயிரம் சிங்கலிக வானரர்கள் கண்களை மூடிக்கொண்டு கைகூப்பியபடி ராமநாமம் ஜபித்துக்கொண்டிருந்தன. பல மணி நேரத்திற்குப்பின் வெளிச்சமும் காற்றும் பட்டதும் கண்களைத் திறந்தன அந்த வானரங்கள். எதிரே ஸ்ரீராமனும் அனுமனும். வரிசையாக கை கூப்பியவாறு நின்று கொண்டிருந்த வானரங்களின் கண்களில் கண்ணீர். "பிரபு ! என்ன நடந்தது என்று தெரியாமல் இருட்டில் பயந்து அடைந்து கிடந்த நாங்கள் ஏதேதோ தவறாகப் பேசி விட்டோம். உங்கள் மேலேயே சந்தேகப்பட்டு விட்டோம்.எங்களை மன்னித்து அருள வேண்டும்" என்று சொல்லி ஆயிரம் வானரங்களும் ஸ்ரீராமனின் பாதங்களில் விழுந்து வணங்கின. அதைக்கேட்டு புன் முறுவல் செய்த ஸ்ரீராமன் எல்லா வானரங்களையும் தன் கையால் தடவிக்கொடுத்தார். எவ்வளவு பெரிய பாக்கியம் வானரங்களுக்கு. அருகில் நின்றிருந்த அனுமன் பக்கம் திரும்பிய ஸ்ரீராமன் அனுமனைப் பார்த்து சொன்னார் " அனுமா! வாலில் பளபளக்கும் மணியுடன் நீ இப்படி நிற்கும் காட்சி எவ்வளவு சுந்தரமாக இருக்கிறது தெரியுமா? இந்தக் கோலத்தில் உன்னை தரிசிப்பவர்களுக்கு பக்தி,ஞானம்,வைராக்கியம் கிட்டும் " என்று வாழ்த்தினார். பின் குறிப்பு: கர்நாடகா,ஆந்திரா மற்றும் தமிழ்நாடு இந்த மூன்று மாநிலங்களிலும் பல ஊர்களில் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த 732 அனுமன் விக்கிரகங்களிலும் வாலில் மணி தொங்கிக்கொண்டிருப்பதாக இருக்கும். ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே| ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வராணனே|| thanks to original uploader 🙏🙏

+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
raman dorairajan Jan 19, 2022

+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
raman dorairajan Jan 19, 2022

+2 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 1 शेयर
raman dorairajan Jan 19, 2022

+2 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
raman dorairajan Jan 19, 2022

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
raman dorairajan Jan 19, 2022

+3 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 0 शेयर
raman dorairajan Jan 19, 2022

+7 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 1 शेयर
raman dorairajan Jan 19, 2022

+6 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 1 शेयर